ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலூன் வியாபாரி கைது


ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலூன் வியாபாரி கைது
x

திருச்சியில் ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலூன் வியாபாரி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி

மலைக்கோட்டை, அக்.4-

திருச்சியில் ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பலூன் வியாபாரி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹீலியம் சிலிண்டர்

திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் நேற்று முன்தினம் இரவில் பலூன் வியாபாரி வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் கரட்டான்காடு, பூனாட்சி காட்டை சேர்ந்த மாட்டு ரவி என்கிற ரவிக்குமார் (வயது 35) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதில் கீழ அம்பிகாபுரம் கிருஷ்ணாபுரம் ஆர்ச் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஜீவானந்தம் (13), பொன்மலை காருண்யா நகரைச் சேர்ந்த சில்வியா (23), அதே பகுதியைச் சேர்ந்த பிரியா (22), மேலகல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த கவியரசு (26) உள்பட 26 பேர் காயமடைந்தனர்.

பலூன் வியாபாரி கைது

இதில், 15 பேர் அரசு மருத்துவமனை உள்பட 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயம் அடைந்த 11 பேர் சிகிச்சை பெற்று வீடு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் கண்ணூசி மாவட்டத்தை சேர்ந்த பலூன் வியாபாரி அனார்சிங் (31) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் திருச்சி ஜீவாநகர் பகுதியில் உள்ள வள்ளுவர்நகரில் வசித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அனார்சிங் ஐதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த போது காஸ்டிங்சோடா, அலுமினியதூள், தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி ஹீலியம் கியாஸ் தயாரிப்பதை கற்றுக்கொண்டார். அந்த கியாசை சிலிண்டரில் நிரப்பி வைத்து இருந்தார். மேலும் அந்த கியாசை பலூன்களில் நிரப்பி வியாபாரம் செய்து வந்தார்.

மேலும், அவர் திருவிழா நடைபெறும் பகுதிகளில் பஞ்சு மிட்டாய் வியாபாரமும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் திருச்சியில் பலூன் வியாபாரம் செய்யும் போது, ரவிக்குமார் சிகரெட் குடித்ததாக தெரிகிறது. அப்போது, தீப்பொறி பறந்து சிலிண்டரில் பட்டது. இதில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனார் சிங் மீது 286 (வெடிக்கும் தன்மையுைடய பொருட்களை கவனக்குறைவாக கையாளுதல்), 337 (உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல்), 338 (கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 304 (ஏ) (அஜாக்ரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இறந்தவர் மீது திருட்டு வழக்குகள்

விபத்தில் இறந்த ரவிக்குமார் தனது 7 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளதாகவும், இவர் மீது ஈரோடு, திருப்பூர், தாராபுரம், கோவை, திருச்சி மாநகர் எ. புதூர், கோட்டை, காந்தி மார்க்கெட், கே.கே.நகர், பொன்மலை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஈரோடு டவுன் போலீசில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பவானி கிளை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.

ஜாமீனில் வந்த அவர் திருச்சி-மதுரை ரோட்டில் உள்ள சோபீஸ் கார்னர் பகுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் ரவிக்குமார் குழந்தைக்கு பலூன் வாங்க வந்தபோது, கியாஸ் சிலிண்டர் வெடித்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது.


Next Story