திற்பரப்பு அருவியில் 16-வது நாளாக குளிக்க தடை
வெள்ளப்பெருக்கு குறைந்தாலும் திற்பரப்பு அருவியில் 16-வது நாளாக குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
வெள்ளப்பெருக்கு குறைந்தாலும் திற்பரப்பு அருவியில் 16-வது நாளாக குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
உபரிநீர் வெளியேற்றம் குறைப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமானதை தொடர்ந்து கடந்த 2 வாரத்திற்கு மேலாக குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கின்றன.
தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அதாவது நேற்றுமுன்தினம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 536 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று அணையில் இருந்து வினாடிக்கு 316 கன அடியாக குறைக்கப்பட்டது. உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இதனால், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இந்தநிலையில் நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல் திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, குலசேகரம், திருநந்திக்கரை, பொன்மனை, சித்திரங்கோடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அருவியில் குளிக்க தடை
திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு குறைந்தாலும், தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால், நேற்றும் 16-வது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அருவியில் குளிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். ஆனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.