சிங்கம்புணரி சீரணி கட்டிடத்தை இடிக்க தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிங்கம்புணரி சீரணி கட்டிடத்தை இடிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில் சீரணி அரங்கம் உள்ளது. இந்த அரங்கம், பொது கூட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. சீரணி அரங்க கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதேபோல தற்போதைய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு வணிக கட்டிடம் கட்டி, கடைகளை வாடகைக்கு விடவும் முடிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகள் தங்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பேரூராட்சி கட்டிடங்களை இடிக்கும் முடிவு ஏற்கத்தக்கதல்ல.
பேரூராட்சி கட்டிடங்களை வணிக நோக்கில் பயன்படுத்த தீவிரமாக செயல்படுகின்றனர். எனவே சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிப்பதற்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் கார்த்திக் ராஜா ஆஜராகி, விளையாட்டு நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் போன்ற பொதுநிகழ்ச்சிகள் நடத்த இந்த அரங்கம் ஒன்றுதான் அங்கு உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.