அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்க தடை ;வேளாண்மை இணை இயக்குனர் அறிவிப்பு


அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து விற்க தடை ;வேளாண்மை இணை இயக்குனர் அறிவிப்பு
x

குமரி மாவட்டத்தில் அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா அறிவித்துள்ளார்.

குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசிதழில் அறிக்கை

வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை 60 நாட்கள் தடைசெய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 1-ந் தேதி முதல் மோனோகுரோட்டோபாஸ், புரபோனோபாஸ், அசிபேட், புரபோனோபாஸ் மற்றும் சைப்பர்மெத்திரின், குளோர்பைரிபாஸ் ஆகிய அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை தற்காலிகமாக தடை செய்திட அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் மனித உயிருக்கும், விலங்குகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லி மருந்து நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உயர்மட்ட குழுவின் பரிந்துரைப்படி மேற்குறிப்பிட்ட 6 அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை 60 நாட்கள் தற்காலிகமாக தடைசெய்து பூச்சிக்கொல்லி சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பூச்சிமருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இம்மாதிரியான பூச்சிகொல்லிகளை 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ, விற்கவோ கூடாது.

சட்ட நடவடிக்கை

3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் பூச்சிமருந்து சட்டத்தின்படி பதிவு செய்யப்படாததாலும், தற்கொலைகளுக்கு காரணமாக இருப்பதாலும் அதனை அரசு நிரந்தரமாக தடைசெய்து உள்ளதால் பூச்சிமருந்து நிறுவனங்களில் மஞ்சள் பாஸ்பரஸ் இருப்பு இருந்தால் உடனடியாக பூச்சிமருந்து ஆய்வாளர்கள் பூச்சிமருந்து சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பூச்சிமருந்து நிறுவனங்களும், விவசாயிகளும் இதுகுறித்து விழிப்புணர்வோடு செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசாணையை மீறி அபாயகரமான பூச்சிமருந்துகளை விற்பனை செய்யும்போது வட்டார பூச்சிமருந்து ஆய்வாளர்கள் மூலம் பூச்சிமருந்து சட்டத்தின்படி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் இதுகுறித்த புகார்களை தங்கள் வட்டார வேளாண்மை அலுவலர் பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடைகளில் ஆய்வு

இந்தநிலையில் நேற்று ராஜாக்கமங்கலம், தோவாளை, குருந்தங்கோடு, திருவட்டார், முன்சிறை ஆகிய பகுதிகளில் அந்தந்த வட்டார பூச்சிமருந்து ஆய்வாளர்கள் உரக்கடைகள் மற்றும் பூச்சிமருந்து கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.


Next Story