அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர்களை இடமாற்றம் செய்ய தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர்களை இடமாற்றம் செய்ய தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர்களை இடமாற்றம் செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதல் நிலை தனி அலுவலராக பணியாற்றி வரும் தனசேகரபாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர் கிரேடு-1 பிரிவில் 2005-ம் ஆண்டு சேர்ந்தேன். பல்வேறு நிர்வாக, பொருளாதார காரணங்களால் பல்வேறு நபர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டபோதும், ஊதியம் குறைக்கப்படவில்லை. இந்தநிலையில் பல்கலைக்கழகத்தின் நிதி பிரச்சினைகளை கருத்தில் கொண்டு 2018-ம் ஆண்டில் 647 அலுவலர்களை பதவி இறக்கம் மற்றும் சம்பள குறைப்பு செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

இந்த உத்தரவு சட்ட விரோதமானது. அலுவலர்களின் பதவி குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு எதிராக பலர் தடை பெற்றனர். அவர்களை போல நானும் என் மீதான நடவடிக்கைக்கு தடை உத்தரவை ஐகோர்ட்டில் பெற்று உள்ளேன்.

இந்தநிலையில் நான் உள்பட 12 தனி அலுவலர்களை விவசாய துறை சார்ந்த அலுவல் பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டு உள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. இந்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சோமையாஜி ஆஜராகி, அரசு ஊழியர்களின் பணி சட்டம் 2016-ன்படி மனுதாரர் மீதான உத்தரவு ஊழியர்களுக்கு எதிரானது என வாதாடினார்.

விசாரணை முடிவில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story