வாழைநார் உற்பத்தி நிறுவனம்; கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்
நாங்குநேரி அருகே சிறுமளஞ்சியில் வாழைநார் உற்பத்தி நிறுவனத்தை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
நாங்குநேரி அருகே சிறுமளஞ்சியில் வாழைநார் உற்பத்தி நிறுவனத்தை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
வாழைநார் உற்பத்தி நிறுவனம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் நாங்குநேரி யூனியன் ராஜாக்கள்மங்கலம் பஞ்சாயத்து சிறுமளஞ்சியில் திருமதி வாழைநார் உற்பத்தியாளர் நிறுவன தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு ராஜாக்கள்மங்கலம் பஞ்சாயத்து தலைவர் வெற்றிவேல் செல்வி தலைமை தாங்கினார். நாங்குநேரி யூனியன் ஆணையாளர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி வரவேற்றார்.
விழாவில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கலந்துகொண்டு வாழைநார் உற்பத்தி நிறுவனத்தை ெதாடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு வாழைநார் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, களக்காடு மற்றும் சேரன்மாதேவி வட்டாரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வாழைத்தார் அறுவடைக்கு பின்னர் வீணாகும் வாழைநார் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்துவதன் மூலம் வாழை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க செய்திடும் விதமாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கு உள்ளூரிலேயே நிரந்தர வருவாய் ஏற்படுத்திடும் விதமாகவும், ஏற்றுமதி செய்யத்தக்க வகையிலான வாழைநார் பொருட்கள் தயாரிப்பு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களை ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் வாயிலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டு உள்ளது. சுத்தமல்லி, கோடகநல்லூர் மற்றும் செங்குளம் ஊராட்சிகளில் 190 பெண்கள் பணிபுரியும் விதமாக 3 வாழைநார் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சுயசம்பாத்தியம்
சென்னையில் உள்ள தொண்டு நிறுவன நிதி பங்களிப்புடன் சிறுமளஞ்சியில் திருமதி வாழைநார் உற்பத்தி நிறுவனம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பெண்கள் தங்களது சுய சம்பாத்தியத்தின் மூலம் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உருவாகிறது. இந்த திட்டத்தை கிராமப்புற பெண்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் கூறினார்.
தொடர்ந்து அவர் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் மூலம் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரமேஷ் பிளவர்ஸ் லிமிடெட் முதன்மை செயல் அலுவலர் சுரேஷ், சென்னை யுனைடெட் வே ஆப் திட்ட தலைவர் ஜெர்சலோ வினோத், பஞ்சாயத்து உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.