தொடர் மழையால் வாழைத்தார் விலை வீழ்ச்சி.. தீபாவளி முன்னிட்டு விவசாயிகள் ஏமாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழையின் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன் வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
நன்கு விளைந்த வாழைத் தார்களை பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்ச நாடன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550-க்கும் விற்பனை ஆனது. நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.600-க்கும் விற்பனை ஆனது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் மழையின் காரணமாக வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.