9 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி: பாபநாசம் பாணதீர்த்தம் அருவியை பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்


9 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி: பாபநாசம் பாணதீர்த்தம் அருவியை பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
x

9 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பாபநாசம் பாணதீர்த்தம் அருவியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

பாணதீர்த்தம் அருவி

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம் அணைக்கு மேலே பிரசித்தி பெற்ற பாணதீர்த்தம் அருவி உள்ளது. இந்த அருவியில் குளிக்க முன்பு அனுமதி இருந்தது. அப்போது பாபநாசம் அணையில் தனியார் படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து, பின்னர் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்து வந்தனர். மேலும் பக்தர்கள் அருவியில் புனித நீராடி விட்டு, தீர்த்தம் எடுத்து செல்லும் வழக்கமும் இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. பாபநாசம் அணையில் இருந்து அனைத்து படகுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

பார்வையிட அனுமதி

தற்போது பாணதீர்த்தம் அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறையினர் நேற்று முதல் அனுமதி வழங்கி உள்ளனர். இதற்கு நுழைவு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.500 நிர்ணயித்து உள்ளனர். முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றதும், பிரத்யேக வாகனத்தில் அழைத்து சென்று அருவியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கொடியசைத்து புதிய வாகனத்தை தொடங்கி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

இதைத்தொடர்ந்து வாகனத்தில் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். அடர்ந்த வனப்பகுதி வழியாக சொரிமுத்து அய்யனார் கோவில், வனப்பேச்சியம்மன் கோவில், காணி மக்கள் வசிக்கக்கூடிய சின்னமயிலாறு, பாபநாசம் அணை வழியாக பாணதீர்த்தம் அருவியின் அருகே அழைத்து சென்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நின்று அருவியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் அடர்ந்த வனப்பகுதியை பார்த்து உற்சாகமும் அடைந்தனர்.

கட்டணத்தை குறைக்க வேண்டும்

இதுகுறித்து அருவியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்கு பின்னர் அடர்ந்த வனப்பகுதி வழியாக வந்து அருவியை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இங்கிருந்து ஐந்தலை பொதிகை, நாகபொதிகை, அகஸ்தியர் மலை, பாண்டியன்கோட்டை ஆகிய பகுதிகளையும் காண்பித்தனர். அருவியின் அருகே செல்ல அல்லது குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். மேலும் நுழைவு கட்டணத்தையும் குறைக்க வேண்டும்' என்றனர்.

வனத்துறையினர் கூறும்போது, அருவியை அதன் அருகே சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி உள்பட வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.


Next Story