மாயூரநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்


மாயூரநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடமுழுக்கை முன்னிட்டு மாயூரநாதர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து தனது சாபம் நீங்க பெற்ற தலம் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை. இங்கு புகழ்பெற்ற மாயூரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் குடமுழுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கையொட்டி அபயாம்பிகை அம்பாள் மற்றும் மாயூரநாதர் சாமிக்கு 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைத்து வேள்வி நடத்தப்பட உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. பூஜைகளை திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிராயன் சாமிகள் முன்னிலையில், சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இதில் முகூர்த்த பந்தக்காலுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்து பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story