சொர்ணாம்பிகை அம்மனுக்கு வளையல்கள் சாத்தி வழிபாடு
தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சொர்ணாம்பிகை அம்மனுக்கு வளையல்கள் சாத்தி வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சொர்ணாம்பிகை அம்மன்
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சொர்ணாம்பிகை அம்மனுக்கு வருட பிறப்பு, ஆடி வெள்ளி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை கடைசி வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று மாலை சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க 18 ஆயிரம் வளையல்கள் மற்றும் பூக்களை பெண்கள் கோவிலை ஊற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் சொர்ணாம்பிகை அம்மனுக்கு 18 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. இதில், சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு வளையல்கள்
இதையடுத்து சொர்ணாம்பிகை அம்மனுக்கு சாத்துப்படி செய்த 18000 வளையல்கள் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
தை கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.