ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைக்கு வருகிறது: வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்-ஆதரவும் இருக்கிறது... எதிர்ப்பும் கிளம்புகிறது...
கிருஷ்ணகிரி:
வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான ஒப்புதல் கிடைத்து விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.
வங்கி சேவைகள்
பணப்பரிமாற்றங்களுக்கு அடித்தளமாக இருப்பது வங்கி சேவைகள் மட்டுமே. முன்பெல்லாம் ஒருவர் வங்கி சேவையை பெற வேண்டும் என்றால், நீண்டநேரம் வங்கிகளில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது வங்கி கணக்குகள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கையும் வெகு சொற்பமாக இருந்தது. இது நாளடைவில் மாற்றம் கண்டது. மத்திய-மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு வங்கி கணக்கு மிக முக்கியமானதாக ஆனது.
இதன் காரணமாகவும், சேமிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்ததாலும் இப்போது வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கேற்றவாறு வங்கி சேவைகளை எளிதாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றங்கள் தான் இப்போதைய வங்கி சேவையில் முதன்மை படுத்தப்படுகின்றன.
வாரத்துக்கு 5 நாட்கள்
என்ன தான் டிஜிட்டல் முறையில் சேவைகள் வழங்கப்பட்டாலும், சில தேவைகளுக்கு நேரடியாக வங்கியை அணுக வேண்டிய நிலை இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் அனைத்து தரப்பு மக்களும் அவ்வப்போது வங்கியை நாடவேண்டிய நிலை உள்ளது. தற்போது வரை வங்கிகளுக்கு மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர மாதத்தில் 2 மற்றும் 4-வது வார சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்து நாட்களிலும் மக்கள் வங்கிகளை நேரடியாக அணுகி சேவையை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் விடுமுறைக்கான ஒப்புதல் பெற முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி, இனி வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் நிலை உருவாகி இருக்கிறது. வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (ஐ.பி.ஏ.) இருதரப்பு ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது.
விரைவில் ஒப்புதல் கிடைத்து நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவ்வாறு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டாலும், அந்த 2 வார சனிக்கிழமை வேலைநாட்களை மற்ற நாட்களில் கூடுதல் நேரத்தில் பணி செய்து நிவர்த்தி செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கு தற்போது எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும்வருமாறு:-
வரவேற்க கூடியது
எஸ்.ஹரிராவ் (இந்தியன் வங்கி அகில இந்திய பொது செயலாளர், கிருஷ்ணகிரி):-
வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை இது. பொதுவாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இதை வரவேற்பார்கள். ஆனால் பொதுமக்கள் தரப்பிலோ, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வங்கி ஊழியர்களுக்கு விடுமுறையா என எண்ண தோன்றும். இந்த இழப்பை ஈடுகட்ட வார வேலை நாட்களில் கூடுதலாக வேலை நேரத்தை அதிகரிக்கிறார்கள். நாள்தோறும் காலை 10 மணிக்கு பணியை தொடங்கி அனைத்து பணிகளையும் முடித்து விட்டு இரவு 8 மணிக்கு மேல் தான் வங்கி ஊழியர்கள் செல்கிறார்கள்.
தற்போது ஒவ்வொரு வேலை நாளும் வங்கி மூடப்படும் நேரத்தை 30 நிமிடம் அதிகரிக்க உள்ளனர். காலையில் இந்த வேலை நேரத்தை அதிகரிக்க கூடாது. மாலை அதிகரித்து கொள்ளலாம் என்பதே எங்களின் நிலைப்பாடு.
தற்போது டிஜிட்டல் மயமாகி விட்டதின் காரணமாக இது போன்ற மாற்றங்களை கொண்டு வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் பலரும் பண பரிவர்த்தனை கணினி, செல்போன் மூலமாக செலுத்தும் நிலைக்கு வந்து விட்டதால் பணம் செலுத்தும், எடுக்கும் நேரத்தையே காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொண்டு வர வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
அன்றாட கணக்கு விவரங்கள்
ஜி.வாசுதேவன் (ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர், ராயக்கோட்டை):-
வங்கி ஊழியர்கள் பண பரிவர்த்தனை, நகை கடன், வீட்டு கடன் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள். மாலை வாடிக்கையாளர்கள் சென்றாலும், அனைத்து ஊழியர்களும் இரவு 7 மணிக்கு மேல் தான் செல்கிறார்கள். அன்றாட கணக்கு விவரங்களை சரியாக ஒப்படைத்த பிறகே செல்ல முடியும். முன்பு வாரத்தில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை இருந்தது.
தற்போது அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என்பது வரவேற்க கூடியது தான். வங்கி ஊழியர்களின் பணிகளை அவர்கள் அன்றாடம் முடித்தால் தான் வீட்டிற்கு கிளம்ப முடியும். நாளை பார்த்து கொள்ளலாம் என்று எந்த வேலையையும் வைத்து விட்டு அவர்கள் வீடு திரும்ப முடியாது. மாதத்தில் கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை என்பது வரவேற்க கூடியது தான்.
வங்கிகளையே நம்புகிறோம்
கே.என்.ஆர்.நாகராஜ், (பெட்ரோல் பங்க் உரிமையாளர், ராயக்கோட்டை):-
பண பரிவர்த்தனைக்கு நாங்கள் வங்கிகளையே நம்பி உள்ளோம். அன்றாட கலெக்சன் தொகையை மறுநாள் காலை வங்கியில் செலுத்துகிறோம். தேவைக்கு வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வருகிறோம். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறை என்பதற்கேற்ப முன்கூட்டியே நாங்கள் திட்டமிட்டு கொள்கிறோம்.
தற்போது சனிக்கிழமையும் விடுமுறை என்றால் பல சிரமங்கள் உள்ளன. பல தொழில் நிறுவனங்களில் வார சம்பளம் சனிக்கிழமை மாலை தான் கொடுக்கிறார்கள். அவர்கள் சனிக்கிழமை தான் வங்கிகளில் சென்று எடுத்து வருகிறார்கள். இது போன்ற விடுமுறையால் பலரும் பாதிக்கப்படுவார்கள்.
வணிகர்கள் பாதிப்பு
மெட்ரோ ஏ.டி.கண்ணன் (கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கதலைவர்):-
வணிக நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமான சேவையே வங்கி சேவை தான். வங்கிகள் தொடர்ந்து இயங்கினால் தான் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை செவ்வனே சிறப்பாக செய்ய முடியும். வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வந்தாலே வியாபாரிகள் என்ன சிரமப்படுவார்கள் என்பதை தொழில் செய்பவர்கள் நன்கு உணர முடியும். மேலும் ஏழை, எளியோர் அவசர தேவைக்காக சனிக்கிழமை விடுமுறை என்கிற போது நகைக்கடன் பெற முடியாத நிலை ஏற்படும்.
எனவே எல்லா வாரமும் சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்பது ஏற்க கூடியது அல்ல. இதனால் முதலில் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான். எனவே வங்கி சேவை வாரத்திற்கு 6 நாட்களும் கட்டாயம் தேவை என்பதே எங்களின் கருத்து.