ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்ததால், வங்கி ஊழியர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்ததால், வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூரைச் சேர்ந்தவர் மாரிராஜா. இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 25).
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
விஷம் குடித்து சாவு
நேற்று முன்தினம் இரவில் வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்கச் சென்றார். அப்போது, அவர் திடீரென்று விஷம் குடித்து மயங்கினார்.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து அவரது அறைக்கு சென்று குடும்பத்தினர் எழுப்பினார்கள். ஆனால் அவரது வாயில் நுரை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரிச்செல்வம் பரிதாபமாக இறந்தார்.
ஆன்லைன்சூதாட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மாரிச்செல்வம் தனது செல்போனில் ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். இதில் அவர் சுமார் ரூ.15 லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாரிச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.