லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் வங்கி பெண் ஊழியர் பரிதாப சாவு


லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் வங்கி பெண் ஊழியர் பரிதாப சாவு
x

புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி பெண் ஊழியர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாபமாக இறந்தார். கணவர் கண் முன்னே நடந்த விபத்தால் சோகமடைந்தார்.

புதுக்கோட்டை

வங்கி ஊழியர்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே அனவயலை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 34). இவர், புதுக்கோட்டையில் ஒரு தனியார் வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் ராஜசேகர், சிவில் என்ஜினீயர். வழக்கமாக பணிமுடிந்ததும் மீனாம்பாள் பஸ்சில் வீட்டிற்கு செல்வாராம். இந்த நிலையில் நேற்று கணவர் ராஜசேகருடன் மோட்டார் சைக்கிளில் மீனாம்பாள் வீட்டிற்கு புறப்பட்டார். வண்டியை ராஜசேகர் ஓட்டினார். பின்னால் மீனாம்பாள் அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை அசோக்நகரில் இரும்பு தடுப்பு கம்பியை தாண்டி மோட்டார் சைக்கிள் சென்ற போது திடீரென நிலைதடுமாறியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மீனாம்பாள் சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியின் சக்கரம் அவரது தலை மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணவர் ராஜசேகர் கண்முன்னே நடந்த விபத்தில் மனைவி மீனாம்பாள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

லாரி டிரைவர் கைது

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த மீனாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் செல்வகணேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story