தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் வங்கி கடன் உதவி
தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் வங்கி கடன் உதவி
வெளிப்பாளையம்:
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு்ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
25 சதவீதம் மானியத்துடன் வங்கி கடன்
நாகை மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினரும், 18 வயது முதல் 45 வயது வரையிலான சிறப்பு பிரிவினரான பட்டியலிடப்பட்ட இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் வரையிலும், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும். மேலும் திட்ட முதலீட்டில் சொந்த முதலீடாக பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள்) 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.
தொழில் முனைவோர் பயிற்சி
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி இணையதளம் வழியாக வழங்கப்படுகிறது. எனவே பயன் பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது தொடர்பான விவரங்களுக்கு நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 8925533969 என்ற எண்ணில் அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.