30 சதவீத மானியத்துடன் வங்கி கடன்
மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 30 சதவீத மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
30 சதவீதம் மானியம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவிக் குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் 10 சதவீதம் பயனாளிகளின் பங்களிப்பு, 60 சதவீதம் வங்கிகடன், 30 சதவீதம் திட்ட மானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில்கடன் வழங்கப்பட உள்ளது.
முன்னுரிமை
ரூ.5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண்தொழிலாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையுள்ள தொழில் திட்டம் குறு தொழிலாகவும், ரூ.15 லட்சத்திற்கு மேல் உள்ள தொழில்திட்டம் சிறு தொழிலாகவும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாக இருந்தால் போதும்.
மேலும் விவரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில்மைய அலுவலர்களை 9344672756 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.