ரூ.68 லட்சம் கையாடல் செய்த வங்கி மேலாளர் கைது
சேரன்மாதேவியில் ரூ.68 லட்சம் கையாடல் செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
சேரன்மாதேவியில் ரூ.68 லட்சம் கையாடல் செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் புகார்
நெல்லை மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முதன்மை மேலாளராக பணிபுரிபவர் கிருஷ்ணன். இவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், ''வடக்கு காருக்குறிச்சி பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 59) என்பவர் கல்லிடைக்குறிச்சி மற்றும் சேரன்மாதேவி பகுதியில் உள்ள தங்களது வங்கி கிளைகளில் மேலாளராக பணிபுரிந்த காலகட்டத்தில், வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியில் இருந்து ரூ.67 லட்சத்து 90 ஆயிரத்து 710 பணத்தை வைப்பு நிதி முதிர்வடையும் காலத்திற்கும் முன்பே மோசடியான முறையில் அவர்கள் கணக்கிலிருந்து கையாடல் செய்துள்ளார். எனவே கிளை மேலாளர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஇருந்தார்.
வங்கி மேலாளர் கைது
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) மீனாட்சிநாதன், இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் ஏட்டு சுப்பிரமணியன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வங்கி வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியை கையாடல் தொடர்பாக நடராஜனை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த மோசடி குற்றச்சாட்டு காரணமாக மேலாளர் நடராஜன் வங்கி நிர்வாகத்தால் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.