வங்கிகள் விரைவாக கடன் உதவிகளை வழங்க வேண்டும்
வங்கிகள் விரைவாக கடன் உதவிகளை வழங்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவகர் பேசினார்.
வங்கிகள் விரைவாக கடன் உதவிகளை வழங்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தென்காசி ஜவகர் பேசினார்.
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கிகள் ஆய்வுக்குழு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்க திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-
விரைவாக வழங்க வேண்டும்
பொதுமக்களுக்கு கடன் உதவிகளை அதிகமாக காலதாமதமின்றி வழங்க வேண்டும். விவசாய கடன், தாட்கோ, வங்கிக்கடன், கல்விக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு மானியக்கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள், மாவட்ட தொழில் மைய மானிய கடன்கள், தெருவோர வியாபாரிகளுக்கான கடனுதவிகள் ஆகிய கடனுதவிகளை எளிய முறையில் விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
1,746 தெருவோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 961 பேருக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் 7 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள வங்கிகளை ஏழை, எளிய மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எளிய முறையில் அணுகி பயன்பெறலாம்.
சேவை நோக்கில்...
அனைத்து வங்கியாளர்களும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடன்வேண்டி வரப்பெற்று நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விரைந்து கடனுதவிகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரவின்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.