தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

நாகப்பட்டினம்

நாகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரின் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ்ஒளி, உதவி பொறியாளர் அருண்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நாகையில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைத்தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தது தெரிய வந்தது. இதேபோல மற்றொரு கடையில் சோதனை செய்தபோது 3 டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றனர்.


Next Story