வெளியூருக்கு அனுப்ப முயன்ற தடை செய்யப்பட்ட டீ கப்புகள் பறிமுதல்
சிவகாசி அச்சகங்களில் தயார் செய்து வெளியூருக்கு அனுப்ப முயன்ற தடை செய்யப்பட்ட டீ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசி,
சிவகாசி அச்சகங்களில் தயார் செய்து வெளியூருக்கு அனுப்ப முயன்ற தடை செய்யப்பட்ட டீ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டீ கப் பறிமுதல்
சிவகாசி பகுதியில் உள்ள சில அச்சகங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட டீ கப்புகள் (கப்பின் உட்பகுதியில் வேதிப்பொருட்கள் பூசப்பட்டு இருக்கும்) அனுமதியின்றி தயார் செய்யப்பட்டு லாரிகள் மூலம் வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதையடுத்து சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் அபுபக்கர் சித்திக், பாண்டியராஜன், தூய்மை இந்தியா திட்ட அலுவலர்கள் கடந்த சில நாட்களாக சந்தேகத்தின் அடிப்படையில் சில லாரி செட்டுகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் பழைய விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு லாரி செட்டிற்கு வந்து இறங்கிய தடை செய்யப்பட்ட டீ கப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
கடும் நடவடிக்கை
இதேபோல் வெளியூரில் இருந்து சிவகாசிக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கேரி பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சிவகாசியில் தயார் செய்யப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்க கூடாது என்றும், வெளியூரில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சிவகாசிக்கு கொண்டு வர கூடாது என்றும் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.