பனியன் நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை
பனியன் நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை இருகூர் ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மாலதி (46). இவர் கோவையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு காரணமாக செந்தில்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன் மனைவி மற்றும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து திருப்பூரில் தங்கும்விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த செந்தில்குமார், மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். பின்னர் தனது மகளுக்கு போன் செய்து திருச்சி ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும், விஷம் குடித்து விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அறிந்த ஓட்டல் நிர்வாகம், அவரை மீட்டு உடனடியாக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி மாலதி கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.