பேரளி ஊர் ஏரி-நீர்வழித்தடங்களை சீரமைக்க கோரிக்கை
பேரளி ஊர் ஏரி-நீர்வழித்தடங்களை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குன்னம்:
குடிநீர் ஆதாரம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பேரளி கிராமத்தில் ஊர் ஏரி உள்ளது. அப்பகுதியில் உள்ள 2 ஏரிகளில் ஊருக்கு அருகில் உள்ளதால் இந்த ஏரிக்கு ஊர் ஏரி என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு வரை சமைப்பதற்கு இந்த ஏரியின் தண்ணீரைத்தான் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த ஏரியின் நடுவே உள்ள குடிநீர் கிணற்றுக்கு நீர் ஆதாரமாகவும், ஆயிரக்கணக்கான கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் நீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்குகிறது.
ஊர் ஏரிக்கான நீர்வழித்தடங்கள் முறையாக சீரமைக்கப்படாததால் தேவையான அளவிற்கு ஏரியில் நீர் நிரம்பவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு மண்வெட்டியை பயன்படுத்தி சிறுவாய்க்காலை சீரமைக்க ெதாடங்கி, தொடர்ந்து ஊர் ஏரி மற்றும் கல்லேரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், நீர்வழித்தடங்களை சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் அப்பகுதி இளைஞர்கள் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
கரையில் சுவர் இடிந்தது
அப்பகுதி இளைஞர்களின் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு அலுவலர்களின் உதவியோடு ஏற்படுத்தப்பட்ட நடுப்பாதை வாய்க்காலை இளைஞர்கள் சீரமைத்து தொடர்ந்து பராமரித்து வந்ததன் பலனாகவும், மக்களும் வாய்க்காலில் ஆங்காங்கே பாலங்கள் அமைத்ததாலும் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு ஊர் ஏரி மற்றும் கல்லேரி நிரம்பி வழிந்தோடியது.
இளைஞர்களின் விடாமுயற்சி மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 2 ஆண்டுகளாக ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. ஆனால் தற்போது பேரளி ஊர் ஏரிக்கரையில் உள்ள சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் உயரும்போது தெற்கு பகுதிக்கரையில் உள்ள துவாரம் வழியே நீர் வெளியேறுவதால் நீர்மட்டம் குறைகிறது. மேலும் ஏரிகள் நிரம்பிய பிறகு, முக்கிய வரத்து வாய்க்காலான நடுப்பாதை வாய்க்காலில் உள்ள குட்டையை உடைத்து ஓடைக்கு தண்ணீரை திருப்பும் நிலையும் உள்ளது.
கோரிக்கை
கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி இளைஞர்கள் மழையையும் பொருட்படுத்தாது ஏரிகளின் நலன் கருதி இரவு நேரங்களில் குட்டையின் கரையை உடைத்து நீரை ஓடைக்குத் திருப்புவதையும், கோடையில் மீண்டும் உடைத்த கரையை சீரமைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே ஏரியின் நீர் நிரம்பி கல்லேரிக்கு செல்லும் வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும். நடுப்பாதையின் இடையே உள்ள குட்டையில் தண்ணீர் தேவைப்படாதபோது ஓடைக்குத் திருப்புவதற்கும், தேவைப்படும்போது ஏரிக்கு நீரைத் திருப்புவதற்கும் மதகு போன்ற உரிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
ஊர் ஏரிக்கு நீர் வரும் மற்றொரு வாய்க்காலின் குறுக்கே செல்லும் பேரளி- மருவத்தூர் சாலையில் உள்ள கற்பாலத்தை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். நடுப்பாதை வாய்க்காலில் சிமெண்டு சுவர் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இணையதளங்கள் வாயிலாகவும், கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாகவும் பலமுறை தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கி இளைஞர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.