27 மீனவர்களை விடுவிக்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினர்
இலங்கை சிறைகளில் அடைத்த 27 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கினர். ராமேசுவரம் தபால் அலுவலகம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம்,
இலங்கை சிறைகளில் அடைப்பு
ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து கடந்த 14-ந் தேதி மீன்பிடிக்கச் சென்றிருந்த 27 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் காங்கேசன் துறை கோர்ட்டிலும், மண்டபம் மீனவர்கள் 12 பேர் மன்னார் ேகார்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
27 மீனவர்களையும் வருகி்ற 27-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் மீனவர்கள் அடைக்கப்பட்டனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
இலங்கை சிறைகளில் தவிக்கும் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் 27 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர். இதனால் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் ராமேசுவரத்தில் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. துறைமுக பகுதி மீனவர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
27 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) பாம்பனில் சாலை மறியல் நடத்த மீனவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மீனவர்களுடன் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
தாசில்தார் அப்துல் ஜபார், மீன் வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி மற்றும் அனைத்து விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அரசுத்துறை அதிகாரிகள், "உங்கள் கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் பாம்பனில் சாலை மறியல் நடத்த வேண்டாம்" என கேட்டுக்கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
அப்போது, மீனவசங்க பிரதிநிதிகள் வருகிற 27-ந் தேதிக்குள் மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் 1-ந் தேதி மண்டபத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சேர்ந்து ரெயில் மறியல் செய்வோம் என தெரிவித்தனர்.
அதே நேரத்தில் பாம்பன் பாலத்தில் நாளை நடத்துவதாக அறிவித்த சாலை மறியலுக்கு பதிலாக இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ராமேசுவரம் தபால் அலுவலகம் முன்பாக நாளை (18-ந் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் எனவும் மீனவ சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.