மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் விசைப்படகு போக்குவரத்து திடீர் நிறுத்தம் பொதுமக்கள் அவதி
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் விசைப்படகு போக்குவரத்து திடீரென நிறுத்தப்படடதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
கொளத்தூர்,
விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
சேலம் மாவட்டம் கொளத்தூரையும், தர்மபுரி மாவட்டம் ஏமனூரையும் இணைக்கும் வகையில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் இருந்து விசைப்படகு போக்குவரத்து நடந்து வந்தது. இந்த விசைப்படகு போக்குவரத்தின் மூலம் நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் மாணவ-மாணவிகளும் பயன் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பண்ணவாடி பரிசல் துறையில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து எந்தவிதமான முன் அறிவிப்பு இன்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த விசைப்படகு போக்குவரத்து மூலம் பயனடைந்து வந்த பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் நேற்று பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் திடீரென விசைப்படகு நிறுத்தம் குறித்து விசாரித்த போது இந்த விசைப்படகு இயக்குவதற்கான டெண்டர் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டு 4 முறை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த விசைப்படகை இயக்கி வந்த ஒப்பந்ததாரர், இந்த விசைப்படகு போக்குவரத்தை நேற்று திடீரென நிறுத்தினார்.
கோரிக்கை
இதைத்தொடர்ந்து இந்த விசைப்படகு போக்குவரத்தை நம்பி வந்த ஏராளமான பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த விசைப்படகு போக்குவரத்தின் மூலம் இரு மாவட்ட மக்களும் பயனடைந்த நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்ட இந்த விசைப்படகு போக்குவரத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என 2 மாவட்ட மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.