தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகிலிருந்து கடலில் தவறி விழுந்து காயமடைந்த மீனவருக்கு படகு உரிமையாளர் நிவாரணம் வழங்க கோரி விசைப்படகு தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மீனவர் காயம்
தூத்துக்குடியில் புயல், மழை எச்சரிக்கை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த விசைப்படகுகள் கடந்த சில நாட்களாக மீண்டும் கடலுக்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீனவர் ஒருவர் தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு படகு உரிமையாளர் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று முன்தினம் விசைப்படகு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 245 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
2-வது நாளாக வேலைநிறுத்தம்
இந்த நிலையில் காயம் அடைந்த மீனவர் சிகிச்சைக்காக, விசைப்படகு உரிமையாளர் சங்கம் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், அதனை தாங்களே நேரடியாக வழங்குவதாகவும், வேறு யாரிடமும் அந்த தொகையை வழங்க முடியாது என்றும் கூறினார்களாம். இதனை தொடர்ந்து 2-வது நாளாக விசைப்படகு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.