தூத்துக்குடியில் 2-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து, தூத்துக்குடியில் 2-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடியில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
விசைப்படகு
தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில், தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள் கடந்த ஜூன் மாதம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது விசை படகு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசைப்படகு உரிமையாளர்கள் வாபஸ் பெற வேண்டும், போலீசார் வழக்கை ரத்து செய்ய வேண்டும், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை முறையாக மீனவர்களுக்கு அறிவிக்காத அதிகாரி மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை
நேற்று வானிலை சீரடைந்த போதிலும், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் அனைத்து படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு செய்து உள்ளனர்.