தமிழக ஜீப் டிரைவர் மீது சரமாரி தாக்குதல்
கம்பம்மெட்டு அருகே தமிழக ஜீப் டிரைவர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தோட்ட தொழிலாளர்கள்
தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான ேதாட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதற்காக மாவட்டத்தில் கம்பம், போடி, கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான ஜீப்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி நேற்று முன்தினம் கம்பம் சவுடம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 45) என்பவர் தனது ஜீப்பில் பெண் தொழிலாளர்களை கேரள மாநிலம் சேத்துக்குழி பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்ட வேலைக்கு அழைத்து சென்றார். பின்னர் வேலை முடிந்து மாலையில் தொழிலாளர்களை ஜீப்பில் கம்பத்துக்கு அவர் அழைத்து வந்து கொண்டிருந்தார்.
ஜீப் டிரைவர் மீது தாக்குதல்
கம்பம்மெட்டு அருகே கருணாபுரம் கிராமத்தில் கல்வேலி தோட்டம் என்னுமிடத்தில் மலைப்பாதையில் முன்னால் ஜீப் ஒன்று சென்றது. அந்த ஜீப் வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சதீஷ்குமார் வழிவிடும்படி ஹாரன் அடித்தார். உடனே ஜீப்பில் சென்றவர்கள் ஆத்திரம் அடைந்து சாலையின் குறுக்கே நிறுத்தினர். பின்னர் அவர்கள் ஜீப்பில் இருந்து இறங்கி வந்த 4 பேர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து ேபானார். இதை தட்டிக்கேட்ட பெண் தொழிலாளர்களை அவர்கள் அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து கேரள மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பெண் தொழிலாளர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கம்பம்மெட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்ற 3 பேரை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
வழக்குப்பதிவு
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கருணாபுரத்தை சேர்ந்த ஷாலி, வினோத், தாமஸ் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பியோடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஜீப் டிரைவரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லாரிகள் சிறைபிடிப்பு
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் நிர்வாகிகள் தேனி-மதுரை சாலையில் பங்களாமேடு பகுதியில் நேற்று இரவு திரண்டனர். அப்போது அந்த வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிச் சென்ற 4 லாரிகளை அவர்கள் சிறை பிடித்தனர்.
அந்த லாரிகளின் டிரைவர்களிடம், தமிழக டிரைவர் தாக்கப்பட்ட வீடியோவை காண்பித்து கண்டனத்தை பதிவு செய்வதற்காக லாரிகளை சிறைபிடித்ததாக தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். லாரிகளை சிறை பிடித்தவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த லாரிகளில் கனிம வளங்கள் விதிகளை மீறி எடுத்துச் செல்வதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், முறையாக சோதனையிட்டு அதன் பிறகு லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த லாரிகள் தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
கனிம வளத்துறை அதிகாரிகளை வரவழைத்து உரிய விசாரணை நடத்தப்பட்ட பிறகு லாரிகள் விடுவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.