தொழிலாளியை சரமாரியாக தாக்கிய கந்துவட்டி கும்பல்; மாணவர் உள்பட 4 பேர் கைது
ஆலங்குளம் அருகே, தொழிலாளியை சரமாரியாக தாக்கிய கந்து வட்டி கும்பலை சேர்ந்த மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே, தொழிலாளியை சரமாரியாக தாக்கிய கந்து வட்டி கும்பலை சேர்ந்த மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கந்து வட்டி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பச்சமால் பெருமாள் (வயது 40). கூலி தொழிலாளி.
இவர் சிவலார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவரும், ஆந்திர மாநிலத்தில் தொலைதூர கல்வி மூலம் இறுதி ஆண்டு சட்டப்படிப்பு பயின்று வருபவருமான நந்தகுமார் (24) என்பவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. பத்தாயிரம் ரூபாய்க்கு வாரம் 300 ரூபாய் வட்டியும் கொடுத்து வந்துள்ளார். 2 ஆண்டுகளில் வட்டி மட்டுமே ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் கொடுத்துள்ளார்.
மிரட்டல்
இந்த நிலையில் கடந்த 2 வாரமாக பச்சமால் பெருமாளுக்கு போதிய வருவாய் இல்லை. அப்போது அவரிடம் வட்டி கேட்டு சென்ற நந்தகுமாரிடம் அடுத்த வாரம் தருவதாக கூறி பச்சமால் பெருமாள் காலம் தாழ்த்தி வந்துள்ளார். தொடர்ந்து 2 வாரங்கள் பொறுத்த நந்தகுமார், பச்சமால் பெருமாளை சந்தித்து நேற்று முன்தினம் ஆபாசமாக திட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பச்சமால் பெருமாளுக்கும், நந்தகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆபாசமாக பேசினால் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்து விடுவேன் என பச்சமால் பெருமாள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் அவரை சரமாரியாக தாக்கியதுடன் தனது உறவினர்கள் சிலரையும் அழைத்தார்.
தாக்கினர்
அப்போது மோட்டார்சைக்கிளில் மருதம்புத்தூரை சேர்ந்த பத்திரம் என்ற பத்திரகாளி (40), சிவலார்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற ஆனந்த் (35), நந்தகுமாரின் சகோதரர் முஜீத்குமார் (22) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பச்சமால் பெருமாளை மிகவும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நிலை குலைந்த அவர் மயக்க நிலைக்குச் சென்றார்.
இதை பார்த்து பயந்துபோன நந்தகுமார், ஆலங்குளம் போலீஸ் நிலையம் சென்று, வட்டி கேட்டுச்சென்ற தன்னை பச்சமால் பெருமாள் தாக்கியதாகவும், தற்காப்புக்காக திருப்பித் தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்ததாகவும் கூறி புகார் அளித்தார்.
கைது
புகாரை பெற்றுக்கொண்ட ஆலங்குளம் போலீசார் அவரை போலீஸ் நிலையத்தில் அமர வைத்துவிட்டு உடையாம்புளி நோக்கி சென்றனர். அங்கு பச்சமால் பெருமாள் மயக்க நிலையில் இருந்ததை அறிந்தனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, 2 ஆண்டுகளாக வட்டி கொடுத்து வந்ததையும், 2 வாரங்கள் மட்டுமே வட்டி கொடுக்காததால் தாக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து 4 பேரும் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.