ஆண்டிப்பட்டி பகுதிகளில் தரிசான விளை நிலங்கள்:வறண்ட கண்மாய்கள் வளமாவது எப்போது?புதிய திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
ஆண்டிப்பட்டி பகுதியில் கண்மாய்கள் வறண்டு காணப்படுவதால் புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ள தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி பகுதிகள் மட்டும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தாலும் ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி பல ஆண்டுகள் ஆகின்றன.
இந்த பகுதியில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக திகழ்கிறது. ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில் 150-க்கும் மேற்பட்டவை குக்கிராமங்கள்.
இந்த கிராமங்களில் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர்.
தேக்கி வைத்து, இருப்பு தண்ணீரை பயன்படுத்துவதற்கும், ஆறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்துவதற்கும் இந்த பகுதிகளில் போதிய வசதி இல்லை. வைகை அணை ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்தாலும் ஆண்டிப்பட்டி சுற்றுப்புற கிராமங்களின் பாசனத்துக்கு பயன்படாத நிலையே நீடிக்கிறது.
திப்பரவு அணை திட்டம்
விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதிய நீரின்றி பல ஆண்டுகளாக மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் நெல், முந்திரி, வாழை போன்ற விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகள் தற்போது மழையை எதிர்பார்த்து மானாவாரி பயிர்களை மட்டும் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி பகுதி மக்கள் தங்களுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை சுமார் அரை நூற்றாண்டு கால கோரிக்கையாக நீடிக்கிறது.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சாராக இருந்தபோதே இந்த கோரிக்கை வலுப்பெற்றது. மக்களின் கோரிக்கையை தொடர்ந்து, வறண்டு கிடந்த கண்மாய்களுக்கு நீர் கொண்டு வருவதற்கு திப்பரவு அணைத்திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்த முயற்சித்தார்.
மூலவைகை ஆற்றில் அணை கட்டி, கால்வாய் மூலம் ஆண்டிப்பட்டியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதே இந்த திப்பரவு அணை திட்டம். 1984-ம் ஆண்டு திப்பரவு அணை திட்டத்திற்காக தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அடிக்கல் நாட்டும் முயற்சியோடு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அணை கட்டப்படும், அதில் இருந்து கண்மாய்களுக்கு நீர் வரும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
தேர்தல் வாக்குறுதிகள்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதியில் இந்த அணைக்கட்டு தொடர்பான அறிவிப்பு இடம் பெற்றாலும், அணை மட்டும் சாத்தியமற்றதாகவே இருக்கிறது.
இதற்கிடையே திப்பரவு அணை திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால் அத்திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டத்தை கொண்டு வரலாம் என்ற பேச்சுவார்த்தை நடந்தது.
அதன் மூலம் விவசாயிகள், திப்பரவு அணைத் திட்டத்திற்கு பதிலாக முல்லைப்பெரியாற்றில் இருந்து ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. முதலில் விவசாயிகளே இதுதொடர்பாக பொறியாளர்கள் உதவியுடன் வரைவு திட்டத்தை தயார் செய்தனர். பின்னர் அரசு தரப்பிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
குழாய் மூலம் தண்ணீர்
மூலவைகை ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கின் போது வரும் கூடுதல் தண்ணீரையும், முல்லைப் பெரியாற்றில் வரும் உபரிநீரையும் இணைத்து குழாய் மூலம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து குளம், கண்மாய், ஊருணி போன்றவற்றில் நிரப்பவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின்படி குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு கண்டமனூர், கணேசபுரம் வழியாக ஏத்தக்கோவில் வரை சுமார் 58 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது.
இதன் மூலம் கணேசபுரம், புதுக்குளம் கண்மாய், விருமானுத்து கண்மாய், தெப்பம்பட்டி கண்மாய், அம்மாபட்டி மூம்மூர்த்தி கண்மாய், கொத்தப்பட்டி புல்லுவெட்டி கண்மாய், அதிகாரி கண்மாய், வரதராஜபுரம் கண்மாய், பிச்சம்பட்டி பெரிய கண்மாய் உள்ளிட்ட 21 கண்மாய்களும், 40 ஊருணிகளிலும் தண்ணீர் நிரப்ப திட்டம் தயாரிக்கப்பட்டது. மேலும் இதனால் சின்னமனூர் அருகே மேட்டுப்பகுதியான ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் பயன்பெறும். இந்த கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்படுவதால் விவசாயத்திற்கும் தண்ணீர் தடையின்றி கிடைக்கும். கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
திட்ட மதிப்பீடு
இந்த திட்டம் தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் தூரம், எவ்வளவு அளவு தண்ணீர், தண்ணீரை கடத்தும் குழாயின் விட்டம், தொழில் நுட்ப விவரம், தற்போதைய விலை நிலவரப்படி தயாரிக்கப்பட்டு, ரூ.256.30 கோடியில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பினர். இந்த அறிக்கை தாக்கல் செய்தும் இன்று வரை இந்த திட்டத்திற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே முல்லைப்பெரியாற்று தண்ணீரை குழாய் மூலம் ஆண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு கொண்டுவரும் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
பயனுள்ளதாக இருக்கும்
தமிழக மலர் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னச்சாமி கூறும்போது, 'ஆண்டிப்பட்டி மிகவும் வறட்சியான பூமியாக உள்ளது. மழையளவும் குறைந்து கொண்டே வருகிறது. அப்படி பலத்த மழை பெய்தாலும் எங்கள் பகுதிக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு, விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
பிச்சம்பட்டியை சேர்ந்த கார்த்திக் கூறும்போது, 'ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் பிச்சம்பட்டி கண்மாய் தான் பெரியதாகும். இந்த கண்மாயில் 50 சதவீத தண்ணீர் தேக்கினாலே சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் கணிசமாக உயரும். குறிப்பாக பிச்சம்பட்டி கண்மாயில் தண்ணீரை தேக்கினால், ஆண்டிப்பட்டி நகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனக்கு தெரிந்த வரையில் இந்த கண்மாயில் அதிகம் தண்ணீர் தேங்கி நான் பார்த்ததே இல்லை. முல்லைப்பெரியாறு அணை மூலம் 5 மாவட்டங்கள் பயன்பெறுகிறது. ஆனால் தேனி மாவட்டத்தில் சில பகுதிகள்தான் பயன்பெறுகிறது. ஆண்டிப்பட்டி பகுதிகளும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்' என்றார்.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
வரதராஜபுரத்தை சேர்ந்த ரஞ்சித் கூறும்போது, 'ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் தற்போது புதர்மண்டி காணப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்மாய்களின் கரைகளை மட்டும் பலப்படுத்தப்படுகிறது. ஆனால் தண்ணீரை தேக்கி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் பெரும்பாலான விவசாய கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஒருகாலத்தில் 3 போகம் விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது ஒருபோக விவசாயத்தை கூட மிகவும் சிரமத்துடன் செய்து வருகின்றனர். வரதராஜபுரம் கண்மாய் உள்ளிட்ட ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை தேக்கினால், அனைத்து விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும்' என்றார்.