தரிசுகளை விவசாய நிலங்களாக மாற்ற மானியம்
திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் தரிசுகளை விவசாய நிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்படுவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உடன்குடி:
திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக மேம்படுத்த மானியம் வழங்கப்படுவதாக திருச்செந்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தரிசு நிலங்களை...
திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக தரிசாக உள்ள நிலங்களை திருத்தி, விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் சொந்த நிலம் உள்ள ஒரு விவசாயிக்கு அதிக பட்சம் 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.
முன்னுரிமை கிராமங்கள்
இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்ட பள்ளிப்பத்து, மூலக்கரை, வீரமாணிக்கம், பிச்சிவிளை, வெங்கட்ராமானுஜபுரம், சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, சீர்காட்சி மற்றும் மணப்பாடு ஊராட்சி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதர கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம்
மேலும் தரிசு நிலங்களை திருத்தி சாகுபடி செய்யப்படும் பயிருக்கு ஏற்றபடி பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவித மானியமும் மற்றும் துணை நிலை நீர்பாசனத் திட்டத்தின் கீழ் புதிதாக ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் மற்றும் நீர் சேமிக்கும் தொட்டி அமைக்க மானியமும் விதிமுறைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் அமைக்க ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 12½ ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஆதார்கார்டு நகல், ஸ்மார்ட் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகநகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் தரிசு நில அடங்கல், கணிணி பட்டா ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மைதுறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.