காவிரி ஆற்றில் 50 தடுப்பணைகள் கட்ட வேண்டும்
மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை காவிரி ஆற்றில் 50 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
மொரப்பூர்:
மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை காவிரி ஆற்றில் 50 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
3-வது நாள் நடைபயணம்
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று 3-வது நாளாக பிரசார நடைபயணத்தை மேற்கொண்டார். கம்பைநல்லூரில் இருந்து அவர் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் புளோரோசிஸ் பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, வறட்சியால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அத்திக்கடவு - அவினாசி நீர்ப்பாசன திட்டம், மேட்டூர் உபரிநீர் திட்டம் ஆகியவற்றை போல் காவிரி உபரிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். கடந்த ஆடிப்பெருக்கு நாளில் மட்டும் காவிரி ஆற்றில் இருந்து 16 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் காவிரி ஆற்றில் இருந்து மொத்தம் 250 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்க வாய்ப்பு உள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். ஆனால் கடந்த 55 ஆண்டு கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளப்பெருக்கு காலத்தில் கிடைக்கும் உபரிநீரை சேமிக்க குறிப்பிடத்தக்க திட்டங்களை செயல்படுத்தவில்லை. காலநிலை மாற்றத்தால் வெள்ளம், கடும் வறட்சி ஆகியவற்றை அடுத்த 50 ஆண்டுகளில் நாம் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதை எதிர்கொள்ள நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
50 தடுப்பணைகள்
மேட்டூர் அணையில் 93 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். வெள்ளப்பெருக்கு காலங்களில் 100 டி.எம்.சி.க்கும் அதிகமான தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை சேமிக்க மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் வரை உள்ள பகுதிகளில் காவிரி ஆற்றின் குறுக்கே 50 இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். இதன் மூலம் 70 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீரை சேமிக்க முடியும். காவிரி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிப்பது மிகவும் அவசியமாகும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் மீண்டும் தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்ய வேண்டும். சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் தேவையில்லை.
மக்களை திரட்டி போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இது குறித்து தேவைப்பட்டால் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பேசுவேன். இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் அதிக அளவில் பங்கேற்பார்கள். தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்ட பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக விரைவில் மத்திய மந்திரியை சந்தித்து பேசுவேன்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார். அப்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.