எரியோடு அருகே விபத்துகளை தடுக்க சாலையில் பேரிகார்டுகள்
எரியோடு அருகே விபத்துகளை தடுக்க சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்-கரூர் பழைய சாலை, தற்போது 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் எரியோடு அருகே தொட்டணம்பட்டியில் அபாய வளைவு உள்ளது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அங்கு மின் விளக்கு வசதியும் இல்லாததால், சாலை இருப்பதே தெரியாமல் விபத்து நடக்கிறது. உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயியான பழனிசாமி அந்த வளைவான சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பால் வேன் மோதியதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து விபத்துகளை தடுக்க தொட்டணம்பட்டியில், வளைவான சாலையில் பேரிகார்டு வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்பேரில் எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் நேற்று தொட்டணம்பட்டியில், வளைவான சாலை பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் பேரிகார்டுகளை வைத்தனர்.