நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் தயார்
நீலகிரியில் வடகிழக்கு பருவமழையையொட்டி நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
குன்னூர்,
நீலகிரியில் வடகிழக்கு பருவமழையையொட்டி நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
கலெக்டர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு உபகரணங்களை நேற்று கலெக்டர்அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம், தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குடிமை பொருள் வழங்கல் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் இணைந்து பணியாற்ற 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அடிப்படை வசதிகள்
ஊட்டி, குன்னூர் உள்பட 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு எற்படக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிப்பு ஏதேனும் ஏற்படும் போது உடனடியாக அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அங்கு பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் அடிப்படை வசதிகள் தயாராக இருப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக இயற்கை இடர்பாடுகளினால் சாலைகளில் மரம் விழுந்தால், உடனடியாக அகற்ற பயன்படுத்தும் எந்திரங்கள் மற்றும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பை பார்வையிட்டார்.
உபகரணங்கள்
ேமலும் உபகரணங்கள் இயங்கும் நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது குன்னூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கண்ணன், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், குன்னூர் தாசில்தார் சிவக்குமார், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.