ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் விஜயா அருணாச்சலம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் டி.ஆர்.ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் வரவேற்றார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
எம்.ஜி.பூங்காவனம் (தி.மு.க.): பொம்மி குப்பம் ஊராட்சி ஏழருவி முருகன் கோவில் முதல் ஜோன்றம்பள்ளி வரை மூன்று கிலோமீட்டர் தூரம் தார் சாலை அமைக்க வேண்டும், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் முனுசாமி வட்டம் பகுதி மற்றும் சரவணன் வட்டம் பகுதிகளில் இரண்டு திறந்தவெளி கிணறு உள்ளது. வாகனங்களில் வேகமாக வருபவர்கள் இதில் விழுந்து அடிபடுகிறார்கள். எனவே இந்த இரண்டு கிணற்றுக்கும் சுற்று சுவர் அமைக்க வேண்டும்.
துக்கன் (தி.மு.க.): ஜவ்வாதுமலை புதூர் நாடு கோம்பை பகுதியில் புதிதாக ஆரம்ப பள்ளி, மற்றும் அங்கன்வாடி கட்டிடமும், கீழூர் கோம்பையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கட்டித் தர வேண்டும்.
அடிப்படை வசதிகள்
பூக்கடை யுவராஜ் (அ.தி.மு.க.): பெருமாப்பட்டு ஊராட்சியில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சுடுகாடு வசதி இல்லை. பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அருவியில் தண்ணீர் கொட்டுவதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். இங்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. எனவே கழிவறை, உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும்.
விஜயா அருணாச்சலம் (தலைவர்): சுற்றுலா தலத்தை மேம்படுத்த அந்தப் பகுதிக்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.
சுடுகாடு வசதி
அன்பு (அ.தி.மு.க.): சின்ன ராச்சமங்கலம் பகுதியில் இருந்து பசலிக்குட்டை செல்லும் சாலையில் ஏரி நிரம்பி தண்ணீர் ஓடுகிறது. தினமும் 200 மாணவர்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் உள்ளது. காளியம்மன் கோவில் பகுதியில் சுடுகாடு இல்லாததால் ஏரியில் புதைக்கும் அவலம் உள்ளது. சுடுகாடு ஏற்படுத்தி தரவேண்டும். ராஜமங்கலம் தார் ரோடு மிகவும் பழுதடைந்து உள்ளதால், உடனடியாக சாலை அமைக்க வேண்டும்.
டி.ஆர். ஞானசேகரன் (துணைத்தலைவர்): வருவாய்த் துறை மூலம் ஏற்கனவே சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க கேட்டு உள்ளோம்.
டாக்டர் திருப்பதி (அ.தி.மு.க.): காக்கணம்பாளையம் ஆற்றைக் கடந்து இடுப்பளவு தண்ணீரில் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனை தினத்தந்தி நாளிதழில் வெளியிட்டு அந்த பகுதிக்கு தற்போது இரும்பு பாலம் அமைக்க உத்தரவிட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இளவரசி (தி.மு.க.): தாதவள்ளி பகுதியில் ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் தேவை என வலியுறுத்தினார்.
இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.