அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்


அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

நகராட்சி கூட்டம்

ஊட்டி நகராட்சி மன்ற கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் காந்திராஜன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் பெரும்பாலான வார்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், குறிப்பாக 36 வார்டுகளிலும் சாலை வசதிகள் சரியாக இல்லை என்றும், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கூறி அனைத்து கவுன்சிலர்களும் ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். பின்னர் கவுன்சிலர்கள் பேசும்போது, அனைத்து வார்டுகளிலும் குடிநீர், கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அனைவருக்கும் வீடு திட்டத்தில் புவியியல் துறை தடையில்லா சான்று பெற அறிவுறுத்தப்படுகிறது. இதை நீக்கி நகராட்சி ஆணையாளர் அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

ரூ.143 கோடியில் திட்டம்

ஆணையாளர் காந்திராஜ்:- நகரில் பாதாள சாக்கடை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதை புதுப்பிக்கவும், 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.143 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது.

முஸ்தபா (தி.மு.க.):- ஊட்டி மார்லிமந்து அணை அருகில் இயங்கும் தார் கலவை ஆலையால் அணை நீர் மாசடைந்து வருகிறது. எனவே, ஆலையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதர் மண்டி கிடக்கும் கோடப்பந்து கால்வாயை சரிசெய்ய வேண்டும்.

ஆணையாளர்:- நீர் வளத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோடப்பமந்து கால்வாயை தூர்வாரி, சுற்றுச்சுவர் கட்ட ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஜார்ஜ்:- நகரில் கால்நடைகள் மற்றும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். அனுமதி இல்லாத கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருப்பு பட்டியல்

துணை தலைவர் ரவிகுமார்:- அடிப்படை வசதிகள் நிறைவேற்ற டெண்டர் விடப்பட்டும். ஒப்பந்ததாரர்கள் டெண்டரை புறக்கணித்து உள்ளனர். பணியை புறக்கணிக்கும் ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் வைத்து, அவர்கள் செய்த பணிகளை ஆய்வு செய்து, தரமானதாக இருந்தால் மட்டுமே பணிக்கான தொகையை அவர்களுக்கு வழங்க வேண்டும். பின்னர் கூட்டத்தில் 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Next Story