நெய்தல் புத்தக திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்:அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு


நெய்தல் புத்தக திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்:அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெய்தல் புத்தக திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.

கடலூர்

ஆலோசனை கூட்டம்

நெய்தல் புத்தக திருவிழா கடலூர் சில்வர் பீச்சில் வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெய்தல் புத்தக திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன் வரவேற்றார்.

அடிப்படை வசதிகள்

கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசுகையில், நெய்தல் புத்தக திருவிழா கடலூர் சில்வர் பீச்சில் 11 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த புத்தக திருவிழா மூலம் மாணவர்களிடம் படிக்கும் எண்ணத்தை தூண்ட வேண்டும். இந்த திருவிழாவுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

நெய்தல் புத்தக திருவிழாவுக்கு வரும் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சிறப்பு குழு அமைக்கப்படும். போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். அதிகாரிகள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து அனைத்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் மாவட்ட கலெக்டர், கருத்துகளை கேட்டறிந்தார். இதில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்டிக்கர் ஒட்டிய கலெக்டர்

இதை தொடர்ந்து நெய்தல் புத்தக திருவிழா குறித்து பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தும் நோக்கில் கலெக்டர் அருண்தம்புராஜ், அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ உள்ளிட்ட 500 வாகனங்களில் நெய்தல் புத்தக திருவிழா ஸ்டிக்கர் ஒட்டினார். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் சோமசுந்தரம், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story