அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு


அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி நகராட்சி 15-வது வார்டில் குடிநீர், சாக்கடை கால்வாய், தார்சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

15-வது வார்டு

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகரின் மேற்கு பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியாக 15-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் பிடமனேரி மெயின் ரோடு, அண்ணா நகரில் 5 குறுக்கு தெருக்கள், அப்பாவு நகரில் 5 குறுக்கு தெருக்கள் மற்றும் ராயப்பா காலனி ஆகிய 13-க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் ஏராளமான குறுக்கு சந்துகள் உள்ளன. 3,500-க்கும் மேற்பட்டோர் இந்த வார்டில் வசித்து வருகின்றனர். 902 ஆண் வாக்காளர்களும், 962 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,864 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வார்டில் சுமார் 110 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வார்டில் உள்ள அப்பாவு நகரில் 2 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று பழுதடைந்துள்ளது. அப்பாவு நகரில் உள்ள சாலைகள் மட்டும் அகலமான சாலையாக உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவில் மரங்கள் உள்ளதால், பசுமையாக காட்சி அளிக்கிறது.

மாதத்துக்கு ஒரு முறை மின்வாரிய ஊழியர்கள் மின் வயர்கள் மீது மரக்கிளைகள் படுவதால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி மரக்கிளைகளை வெட்டி வருகிறார்கள். இது அனைத்து தரப்பு மக்களையும் முகம் சுளிக்க வைக்கிறது. குறிப்பாக இந்த அப்பாவு நகரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

15 ஆண்டு கால போராட்டம்

இந்த வார்டுக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து போக்குவரத்துக்கு உபயோகமற்ற நிலையில் உள்ளன. மேலும் இந்த சாலைகளையொட்டிய சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாராததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அண்ணாநகர் 3-வது குறுக்கு தெருவில் உள்ள பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகளாக தார்சாலை கேட்டு போராடி வருகின்றனர். குறிப்பாக அண்ணாநகர் பகுதிக்குள் எந்த கனரக வாகனங்களும் வர முடியாத அளவுக்கு சாலை குறுகலாக உள்ளது.

குறிப்பாக இந்த வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் பல ஆண்டுகளாக ரேஷன் பொருட்கள் வாங்க அருகில் இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரி ஏரிக்கரை அருகே உள்ள ரேஷன் கடைக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

அடிப்படை தேவைகள்

இந்த பகுதியில் உள்ள சாலை சந்திப்புகளில் தெரு விளக்குகள் அதிக அளவில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாக்கடை கால்வாய்கள் அனைத்தும் மிகவும் குறுகலாக உள்ளதால் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

சாலைகள் குண்டும், குழியுமாய் இருப்பதால் சாலைகளை சீரமைக்க வேண்டும். சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். தண்ணீர் தேவைக்கு மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ரேஷன் கடை வேண்டும்

அண்ணா நகரை சேர்த்த குடும்பத் தலைவி பிரியா செல்வம்:-

தர்மபுரி நகரில் மிகவும் பின்தங்கிய பகுதியாகவே 15-வது வார்டு உள்ளது. நகரின் மற்ற பகுதிகளை காட்டிலும் இந்த பகுதியில் தூய்மை பணியாளர்கள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகிறோம். இதனால் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே இந்த பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா நகர் மற்றும் பிடமனேரி பிரதான சாலை இணைப்பு பகுதிகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாய்களையும் தூர்வார வேண்டும்.

குடிநீர் தொட்டி

கால்நடை பராமரிப்புத்துறை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சீனிவாசன்:-

அண்ணா நகர் பகுதியில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாய்களையும் உடனே சீரமைக்க வேண்டும். மழைக்காலங்களில் இந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வண்ணம் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கோடை காலம் நெருங்குவதால் இந்த பகுதியில் மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். குறிப்பாக இந்த பகுதியில் பழுதடைந்து உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க வேண்டும். வாரத்துக்கு 2 முறையாவது இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே தேங்கி கிடைக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். இந்த பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடைபாதை

அப்பாவு நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் மாதவன்:-

அப்பாவு நகரில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு வரும் பொதுமக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அப்பாவு நகர் பிரதான சாலையில் அதிக அளவில் தெரு விளக்குகளை அமைக்க வேண்டும். பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை அமைக்க வேண்டும். அப்பாவு நகர் பகுதி பசுமை நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள மரக்கிளைகளை மின்வாரிய ஊழியர்கள் அடிக்கடி வெட்டி விடுகிறார்கள். இனிவரும் காலங்களில் மரங்களை வெட்டாமல் பாதுகாக்கும் வகையில் மின்வயர்களை பூமிக்கடியில் கேபிள் அமைத்து எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு அரங்கம் நுழைவுவாயில் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும். ஆங்காங்கே குவிந்து கிடக்கும் மண் குவியல்களை அகற்ற வேண்டும். அப்பாவு நகர் மற்றும் பிடமனேரி மெயின் ரோடு இணைப்பு சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story