அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
வடபாதிமங்கலம் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர், நவ.23-
வடபாதிமங்கலம் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு உயர்நிலைப்பள்ளி
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.குறிப்பாக, கஜா புயலின் போது இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் இன்று வரை சீரமைக்கப்படவில்லை. பள்ளி வளாகம் போதிய சுகாதார வசதியுடன் சீரமைக்கப்படவில்லை. பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. எனவே பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமித்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் கட்டிடங்கள்
இது குறித்து பெற்றோர் கூறியதாவது:-
"வடபாதிமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியரை உடனடியாக நியமிக்க வேண்டும். தரமான கல்வியை கற்றுத்தருவதில் ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். கஜா புயலின் போது இடிந்து விழுந்த பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும். பள்ளியில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் நடைபாதை சேறும் சகதியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும். பள்ளியின் முகப்பில் அலங்கார வளைவை மீண்டும் கட்ட வேண்டும். பள்ளியில் போதுமான கட்டிட வசதிகள் இல்லை. இதனால், கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும். வடபாதிமங்கலம் உயர் நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.