அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்- நகர்- ஊரமைப்பு துணை இயக்குனர்


அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்- நகர்- ஊரமைப்பு துணை இயக்குனர்
x
தினத்தந்தி 29 March 2023 7:15 PM GMT (Updated: 29 March 2023 7:16 PM GMT)

நாகை-வேளாங்கண்ணி கூட்டு உள்ளூர் திட்டத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என நகர்- ஊரமைப்பு துணை இயக்குனர் கூறினார்.

நாகப்பட்டினம்

நாகை-வேளாங்கண்ணி கூட்டு உள்ளூர் திட்டத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என நகர்- ஊரமைப்பு துணை இயக்குனர் கூறினார்.

கருத்து கேட்பு கூட்டம்

நாகை நகராட்சி அலுவலகத்தில் நகர் மற்றும் ஊரமைப்பு துறை சார்பில் நாகை- வேளாங்கண்ணி கூட்டு உள்ளூர் திட்ட குழுமத்தின் முழுமை திட்டம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர் மற்றும் ஊரமைப்பு துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பிரதீப்மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர் மற்றும் ஊரமைப்பு துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

முழுமை திட்டம்

தமிழ்நாடு அரசால் கடந்த 1985-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முழுமை திட்டத்தில் நாகை நகராட்சியில் உள்ள மொத்த நிலப்பரப்புகளை நகரளவு எண்கள் அடிப்படையில் குடியிருப்பு பகுதி, வணிக பகுதி, கல்வி உபயோக பகுதி, விவசாய பகுதி, தொழிற்சாலை பகுதி என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் கட்டிட அனுமதி வழங்குதல் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மறு ஆய்வு செய்யப்படும்

முழுமை திட்டமானது 10 ஆண்டு காலத்திற்கு ஒருமுறை நிலப்பரப்பின் வளர்ச்சிக்கு ஏற்ப மறு ஆய்வு செய்யப்படும். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை திட்டம் மறு ஆய்வு செய்யப்படாமல் இருந்தது. எனவே தற்போது நகர் ஊரமைப்பு துறையால் கடந்த 2022-ம் ஆண்டு நாகை - வேளாங்கண்ணி கூட்டு உள்ளூர் திட்ட குழுமத்தில் முழுமை திட்டம் வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் 2041-ம் ஆண்டு வரை நீடித்து நிற்கும்.

இந்த திட்டம் நாகை நகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி, நாகூர் நகராட்சி, பாலையூர், ஐவநல்லூர், செல்லூர், அந்தணப்பேட்டை, வடக்கு பொய்கைநல்லூர், பொரவாச்சேரி, சிக்கல், மஞ்சக்கொல்லை, பாப்பாகோவில், கருவேலங்கடை ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தொலைநோக்கு பார்வையுடன்...

தொலை நோக்கு பார்வையுடன் தயார் செய்யப்பட்ட இந்த திட்டத்திற்கு கலெக்டர் தலைவராக செயல்படுவார். இந்த திட்டத்தில் நகரின் வளர்ச்சிக்காக சாலை விரிவாக்கம், சுற்றுச்சாலை அமைத்தல் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். இதில் நகரமைப்புக்குழு அலுவலர்கள் முருகானந்தம், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story