குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு
குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் குளித்து செல்கிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு தென்காசி, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியது.
குளிக்க தடை
இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் அருவியை பார்த்து சென்றனர். மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
எனினும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.