குற்றாலம் அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை


குற்றாலம் அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை
x

குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது

தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

நேற்று முன்தினம் மாலையில் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 2 பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். அந்த நேரத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

2-வது நாள்

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குற்றாலத்திற்கு வழக்கமாக வருவார்கள். அவ்வாறு வரும்போது அருவிகளில் குளிப்பார்கள். அதிக வெள்ளத்தில் குளிக்கும் போது ஆபத்து ஏற்படும் என்பதால் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று முழுவதும் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

எனவே, நேற்று 2-வது நாளாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

செயல்படாத அலாரம்

தற்போது குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து காணப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) வெள்ளப்பெருக்கு இல்லையென்றால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கும் விதமாக அருவிக்கரையில் அபாய ஒலி எழுப்பும் வகையில் அலாரம் கருவி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது செயல்படாமல் உள்ளது. அதனை செயல்படுத்த வேண்டும், என்று சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கூறும் போது, செண்பகாதேவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு தான் மெயின் அருவிக்கு அந்த தண்ணீர் வருகிறது. எனவே அங்கு கண்காணிப்பு கேமரா அமைத்து அதனை கண்காணிக்க ஏற்பாடு செய்யலாமா? என ஆலோசனை நடைபெற்று வருகிறோம், என்றார்.


Next Story