உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்-மாணவ-மாணவிகளுக்கு கல்வியாளர்கள் அறிவுரை


எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் மாணவ-மாணவிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ கல்வி கண்காட்சியில் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

திருச்சி

திருச்சி, ஜூன்.7-

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதில் மாணவ-மாணவிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' கல்வி கண்காட்சியில் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

மாணவ-மாணவிகளுக்கு வரப்பிரசாதம்

'தினத்தந்தி' கல்வி கண்காட்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர். உயர்கல்வி கற்பதற்கும் வழிகாட்டினர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை தலைவர் பேராசிரியர் ஆர்.மங்கலேஸ்வரன் கூறியதாவது:-பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களின் குழப்பத்துக்கு தீர்வு காண இந்த கண்காட்சி சிறந்த வழியாக இருக்கும். இந்த கண்காட்சி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது கல்வி தான். அது தான் அவர்களுக்கு கைக்கொடுக்கும். அந்த கல்வியை தேர்ந்தெடுப்பதில் மாணவ-மாணவிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உயர்கல்வியில் நமக்கான இலக்கை மாணவ-மாணவிகள் தேடிப்பிடிக்க வேண்டும். அதற்கு 'தினத்தந்தி' கல்வி கண்காட்சி வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. உயர்கல்வி குறித்து ஆன்லைனில் பல்வேறு தகவல்களை நாம் தேடிப்பிடித்து பார்த்தாலும் நேரடியாக ஒவ்வொரு துறைசார்ந்த கல்வியாளர்களுடன் கலந்துரையாடும்போது, மாணவர்களுக்கு உயர்படிப்பு குறித்த தெளிவு கிடைக்கும். ஆகவே 'தினத்தந்தி' நடத்தும் இந்த கண்காட்சி மாணவ-மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் வரப்பிரசாதமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர்படிப்பு குறித்த தெளிவு

சென்னையை சேர்ந்த கல்வியாளர் சி.ராஜா கூறியதாவது:-

'தினத்தந்தி' நடத்தும் இந்த கண்காட்சியில் மிகப்பெரிய 50 கல்வி நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. ஒவ்வொரு நிறுவனத்தினரும் மாணவ-மாணவிகளுக்கு தெளிவான விளக்கங்களை அளிக்கிறார்கள். 2 ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் முடங்கி கிடந்த மாணவ-மாணவிகள் அடுத்தக்கட்ட உயர்கல்வி படிப்பை பற்றி நேரடியாக அறிந்து கொள்ள இந்த கண்காட்சி உதவிக்கரமாக உள்ளது. பெரும்பாலும் உயர்படிப்பை தேர்வு செய்யும்போது, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், உறவினர்களிடம் கேட்டுதான் முடிவு எடுக்கிறார்கள்.

ஆனால் கல்வியில் ஒவ்வொரு துறைசார்ந்த வல்லுனர்களிடம் நேரடியாக கலந்துரையாடும் போது, நமக்கு புதிய அனுபவம் கிடைக்கும். உயர்படிப்பு குறித்த தெளிவான சிந்தனை ஏற்படும். நீட்தேர்வை எழுதி தேர்ச்சி பெறவில்லையென்றால் அடுத்து என்ன படிப்பது என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். இங்கு வந்து கண்காட்சியில் உள்ள அரங்குகளை பார்த்து விளக்கங்களை கேட்டு வெளியே வரும்போது, அடுத்து என்ன படிக்கலாம் என்ற புரிதல் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story