குன்னூரில் குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்


குன்னூரில் குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம்  பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் தீவனப் பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு முன்னர் வனப்பகுதிக்குள் சென்றபோது மட்டும் வனவிலங்குகளை பார்த்த நிலையில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகின்றன. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு மனித- மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் குன்னூர் மவுன்ட்பிளசன்ட் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று சாவகாசமாக வலம் வந்தது. இதை அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

இதுவரை இரவு நேரங்களில் ஊருக்குள் வனவிலங்குகள் வந்து சென்ற நிலையில் தற்போது பகல் நேரத்தில் வனவிலங்குகள் வருவது பொது மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- சமீப காலமாக குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல பள்ளிகளின் கதவுகளை உடைத்து அரிசி, பருப்பு, முட்டை போன்றவற்றை கரடிகள் சாப்பிட்டும் சேதபடுத்தியும் வருகின்றன. இதேபோல் நேற்று முன்தினம் ஜெகதலா பகுதியில் காலில் காயமடைந்த நிலையில் சிறுத்தை சுற்றி திரிந்தது. அதற்கு முன் உபதலை பகுதியில் சரக்கு வேனில் இருந்த பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை எடுத்து கரடி ருசி பார்த்தது.

உணவுப் பொருட்களை மட்டும் சாப்பிட்டு விட்டு சென்று விட்டால் பரவாயில்லை. வனவிலங்குகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அவை மனிதர்களை தாக்க முயற்சிக்கலாம். எனவே வனத்துறையினர், கூண்டு வைத்து ஊருக்குள் வரும் வனவிலங்குகளை பிடித்து அடர்ந்த வனபகுதியில் விட வேண்டும். மேலும் குறிப்பாக வனவிலங்குகள் எதற்காக அடர்ந்த காட்டை விட்டு வெளியே வருகின்றன என்று ஆராய்ந்து அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story