என்ஜினீயரிங் படிக்க விருப்பம் இல்லாததால்தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை
தேனி அல்லிநகரத்தில் என்ஜினீயரிங் படிக்க விருப்பம் இல்லாததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அல்லிநகரம் அருகே உள்ள அன்னஞ்சி பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் கிஷோர் குமார் (வயது 18). இவர், தற்போது நடந்த பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து மேற்படிப்புக்காக ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அவர் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர், வீட்டில் உள்ள ஒரு அறையை உள்புறமாக பூட்டிவிட்டு அங்கு படித்து கொண்டிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜெயராமன் அறையின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கிஷோர் குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராமன் அல்லிநகரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் என்ஜினீயரிங் படிக்க விருப்பம் இல்லாததால் கிஷோர் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.