சாலையோரம் லாரிகளை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் நிலை
திருச்சி-ராமேசுவரம் பைபாஸ் சாலையோரத்தில் கனரக லாரிகளை நிறுத்தி விட்டு செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க பகல் நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
காரைக்குடி
திருச்சி-ராமேசுவரம் பைபாஸ் சாலையோரத்தில் கனரக லாரிகளை நிறுத்தி விட்டு செல்வதால் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க பகல் நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சாலையோரத்தில் லாரிகள்
திருச்சியில் இருந்து ராமேசுவரத்திற்கு பைபாஸ் சாலை செல்கிறது. இந்த சாலையில் செல்வதால் போக்குவரத்து நேரம் குறைவாக உள்ளதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பஸ்கள், கார்களில் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்த பைபாஸ் சாலையானது காரைக்குடி வழியாக தேவகோட்டை, புளியால் வழியாக செல்கிறது. தற்போது காரைக்குடி அருகே இந்த பைபாஸ் சாலையோரத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம், பத்திர பதிவு அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுதவிர வட்டார போக்குவரத்து அலுவலக பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகே மத்திய அரசின் பவர் கீரிட் ஒன்றும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த அரசு அலுவலகத்திற்கு கார், மோட்டார் சைக்கிளில் வரும் பொதுமக்கள் பைபாஸ் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தங்களது பணிகளை மேற்கொள்ள சென்று விடுகின்றனர். இதேபோல் நெடுந்தொலைவில் இருந்து லாரிகளில் வரும் டிரைவர்கள் இந்த பைபாஸ் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
போலீசார் ரோந்து பணி
சில டிரைவர்கள் சாலையோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு அதில் படுத்து தூங்கி விடுகின்றனர். இவ்வாறு கடந்த 11-ந்தேதி பைபாஸ் சாலையோரத்தில் கனரக லாரியை அதன் டிரைவர் நிறுத்தி விட்டு சென்றுவிட்டார். அப்போது இளையான்குடியில் இருந்து 30 பெண்களை ஏற்றி வந்த வேன் ஒன்று நின்ற இந்த லாரியின் பின்புறத்தில் மோதிய விபத்தில் 3 பேர் இறந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இவ்வாறு அடிக்கடி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படும் இந்த லாரிகள் மூலம் விபத்து ஏற்பட்டு தொடர்ந்து உயிர்பலி ஏற்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த தொடர் விபத்துகளை தடுக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் இந்த பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலையோரத்தில் நிறுத்தப்படும் லாரிகளுக்கு அபாராதம் விதிக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க முடியும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.