குளித்தலை அரசு மருத்துவமனையில் குழந்தைகள், தாய்மார்களை தேனீக்கள் அச்சுறுத்தல்
குளித்தலை அரசு மருத்துவமனையில் குழந்தைகள், தாய்மார்களை தேனீக்கள் அச்சுறுத்தி வருகின்றனர். இதனை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை
அரசு மருத்துவமனை
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குளித்தலை நகரம் மற்றும் குளித்தலையை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ள நோய்க்கான சிகிச்சை பெறவும், பரிசோதனை செய்து கொள்ளவும் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.அதுபோல விபத்துகளினால் காயம்பட்டவர்கள், தீக்காயம் அடைந்தவர்கள், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கணிசமான எண்ணிக்கையில் பலர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேன்கூடு
கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாதம் தோறும் வந்து பரிசோதனை செய்துகொண்டு மருந்து மாத்திரைகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த மருத்துவமனையை பொறுத்தவரை நோயால் பாதிக்கப்பட்டு பரிசோதனை செய்துகொள்ள வருபவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்களை பார்த்துக் கொள்வதற்காக உடனிருப்பவர்கள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.இந்த சூழ்நிலையில் குளித்தலை அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள மருந்தக கட்டிடம் அருகே உள்ள மரத்தில் பெரிய தேன்கூடு ஒன்று உள்ளது. இந்தக் கூட்டில் இருந்து தேனீக்கள் அங்கும் இங்கும் பறந்து செல்வதை பார்க்க முடிகிறது.
தாய்மார்கள் அச்சம்
அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் மருத்துவமனை கட்டிடத்தில் மின் விளக்குகள் எரியும் பொழுது அதைச் சுற்றி தேனீக்கள் வட்டமடித்த வண்ணம் உள்ளன. இந்த தேன்கூடு உள்ள மரத்தின் சற்று அருகில் லேபர் வார்டு என்று அழைக்கப்படும் மகப்பேறு பிரிவுக்கான கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இரவு நேரங்களில் தேனீக்கள் இந்த மகப்பேறு பிரிவு கட்டிடத்தில் ஆங்காங்கே பறந்து கொண்டே இருப்பதால் பச்சிளம் குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தேனீக்களுக்கு பயந்து அவர்கள் இரவு நேரங்களில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் உறங்க முடியாமல் கட்டிடத்தின் வறண்ட பகுதியில் தங்கள் பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை
தேனீக்கள் கொட்டினால் பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய ஆபத்தான நிலை அங்கு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேன்கூடு உள்ள மரத்தில் எண்ணற்ற பறவைகள் பறந்து செல்கின்றன அவ்வாறு செல்லும்போது தேன்கூடு கலைக்கப்பட்டால் அதிலிருந்து வெளிப்படும் தேனீக்கள் மருத்துவமனையில் உள்ள அனைவரையும் கடிக்கக் கூடிய ஆபத்தான சூழ்நிலை உள்ளது.எனவே நோயாளிகள் மட்டும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனையில் உள்ள தேன்கூட்டை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.