கலெக்டர் அலுவலகம் முன்புஜாக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ-ஜியோ சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜாக்டோ-ஜியோ சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பேயத்தேவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சீனிவாசன், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். சரண் ஒப்படைப்பு விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.