பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்.
1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.
இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்தது.
ஓடி ஒளிந்தார்கள்
* ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப் போவார்கள்.
அரசு வாகனங்கள் வருவதைக் கண்டாலே போதும் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள்.
* அவ்வாறு பிடித்துப் போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவ மனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.
* மன நோயாளிகளாக இருந்தால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவர்.
* மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.
* நிர்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாக இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப் படுவார்கள்.
* இதற்காக தமிழ்நாட்டில் 6 இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் கட்டித் தரப்பட்டன.
இது ஒரு உன்னதமான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடைமுறைப் படுத்தி இருந்தால் பிச்சைக் காரர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
காசு பார்க்கும் கயவர்கள்
'பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்தது.
நாளடைவில் அது முடங்கிப் போனதால் பஸ், ரெயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், வழிப்பாட்டு தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப்போயின.
குழந்தைகளின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுகின்றனர்.
அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால்? குழந்தைகள், பெண்களை கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் தள்ளி காசு பார்க்கும் கயவர் கூட்டமும் நிழல் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' திைரப்படம், இந்த அக்கிரமத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.
பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஐதராபாத், இந்தூர், லக்னோ, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப் படுகிறது.
போலீஸ் நடவடிக்கை
தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களைக் குழந்தை குட்டிகளுடன் காணமுடிகிறது.
இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் அரசு காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.
பெண்கள், குழந்தைகளை பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறுவாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதற்காக எடுத்துவரும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து கீழே காண்போம்.
சிறு தொழில்கள்
திருவண்ணாமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் இந்திரராஜன்:- முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் 1972-ம் ஆண்டு பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் என்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மல்லவாடியில் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. தற்போது தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையமாக செயல்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறைந்து காணப்படுகிறது. திருவண்ணாமலையை பொறுத்தவரையில் குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் தான் பெரும்பாலான பிச்சைக்காரர்களாக உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மல்லவாடியில் உள்ள மறுவாழ்வு இல்லத்தை புதுப்பித்து அவர்களை அங்கு தங்க வைத்து உரிய உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இந்த மகத்தான திட்டத்தை தற்போது உள்ள அரசு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் சினம்பெருமாள்:- திருவண்ணாமலை முக்கிய ஆன்மிக நகரமாகும். சமீப காலமாக திருவண்ணாமலையில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பிச்சை போடவில்லை என்றால் சிலர் மக்களை தவறாக பேசி வருகின்றனர். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினால் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.
அடிப்படை வசதிகள்
வாணியம்பாடி கருணை உள்ளம் நிர்வாகி டேவிட் சுபாஷ் சந்திரன்:-வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்று சாலைகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களை, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பிடித்து வந்து பெருமாள் பேட்டை பகுதியிலுள்ள கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். கடந்த வாரம் மட்டும் இரண்டு நாட்களில் 40 பேர் இங்கு ஒப்படைக்கப்பட்டனர்.
அரசு இதுபோன்ற ஆதரவற்று தெருக்களில் சுற்றி திரியும் நபர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்ய வேண்டும்.
காப்பகம் அமைக்க வேண்டும்
வேலூரை சேர்ந்த சமூக சேவகர் ராமன்:- வேலூரில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து வருகிறேன். மாவட்டத்தில் உள்ள காப்பகங்களில் பெரும்பாலும் தனக்கான வேலைகளை தானே செய்து கொள்ளும் தன்மையுடைய முதியவர்களை தான் சேர்க்க முடிகிறது. கை, கால்களை இழந்த முதியவர்கள், ஆதரவற்றவர்கள், படுத்த படுக்கையில் உள்ள முதியவர்களுக்கு வேறு ஒருவரின் உதவி தேவைப்படுகிறது. அந்த வகையான முதியவர்களை பராமரிப்பதற்கு வேலூரில் காப்பகம் இல்லை. எனவே அவர்களுக்கு என்று தனியாக ஒரு காப்பகம் வேலூரில் அமைக்கப்பட வேண்டும்.
ஆற்காடு அடுத்த கலர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன்:- ஆற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோர் பஸ் நிலையங்கள், சாலை ஓரங்கள், ஓட்டல்கள், கோவில்களின் முன் பிச்சை எடுக்கின்றனர். ஆதரவற்ற இவர்களுக்கு ஆற்காடு பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மதிய வேளையில் உணவு வழங்குகின்றனர். மேலும் குளிர் காலம் என்பதால் அவர்களுக்கு போர்வை வழங்குகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தி, மானியத்தில் கடன் வழங்கி தொழில் தொடங்க முன்வர வேண்டும். பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு அளித்து இவர்களும் சராசரி மனிதர்களைப் போல வாழ வேண்டும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் திறக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழகம் பிச்சைக்காரர்கள் இல்லாத நாடாக திகழும் என்பது எனது கருத்து.
திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் சி.ரமேஷ்:- ஆதரவற்றோருக்கும், நலிவடைந்தோருக்கும் உதவ வேண்டும் என்பது நம் எல்லோரின் சமூக பொறுப்பு ஆகும். குடும்பம் இல்லாதவர்கள் அல்லது குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள், மிகவும் வயதான உழைக்கும் திறனற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், கடுமையான வறுமையில் தவிப்பவர்கள், திக்கற்றவர்கள் போன்றோர் இரவலர்களாகும் நிலைமை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இவர்களுக்கென அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு இரவலர்களை அரவணைக்க வேண்டும். சுற்றுலா தலங்கள், ரெயில் நிலையம், பஸ் நிலையம், முக்கிய வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்களில் யாசகர்கள் அதிகமாக உலாவுவதால் பொதுமக்களுக்கு சில நேரங்களில் சங்கடம் ஏற்படுகிறது. இதனை தடுக்க மாவட்டம் தோறும் அவர்களுக்கு நல்வழி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.