மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி; கலெக்டர் தகவல்
மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளாா்.
மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்கள் 20 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு குடிமை பணிகளுக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசால் ஆணை வழங்கப்பட்டது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை -துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக வேலைநாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து வருகிற 31-ந்தேதி (அதாவது நாளை திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் 7-வது தளம், மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு -638011 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி, துணை, இணை இயக்குனர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.