பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 369 பேருக்கு பணி ஆணை
ராணிப்பேட்டையில் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 369 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள 369 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வீதம் ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி பொறியாளர் முருகதாசன், தொழில்நுட்ப உதவியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.