தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?


தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா?
x

வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்துக்கு பலனா? பாதிப்பா? என்று தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். கட்டிட தொழில்களில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தவர்கள் இன்று எல்லா இடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்கள்.

வடமாநிலக்காரர்கள்

தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல தொழில் நிறுவனங்களில் முன்பு எல்லாம் மண்வாசனையை நுகர முடியும். அதாவது அங்கு வேலை செய்யும் ஆண், பெண் இருபாலரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பேசுகிற தமிழே அதை அடையாளம் காட்டும்.

இன்று அந்த நிறுவனங்களில்கூட திக்கித்திக்கி இந்தி கலந்து தமிழ் பேசுகிற வட மாநிலத்தவரை காண முடிகிறது.

அதாவது பானி பூரி விற்பதில் தொடங்கி, கட்டிட வேலைகள், மெட்ரோ பணிகள், ஓட்டல் வேலைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், இறைச்சி கடைகள், மீன் வெட்டுதல், முடி வெட்டுதல் என அனைத்து வேலைகளுக்கும் வந்துவிட்டனர்.

சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் பரவி விட்டனர்.

திணித்துக்கொள்கிறோம்

இந்தி திணிப்பை எதிர்த்துவரும் நாம், இந்திக்காரர்களை நமக்கு நாமே திணித்து கொண்டிருக்கிறோம். இதை ஆதங்கப்பட்டோ பொறாமைப்பட்டோ கூறவில்லை. அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நாம் அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும். குறைந்த சம்பளம் என்றாலும் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள். அதை வரவேற்றுத்தான் தீரவேண்டும்.

நம்மவர்கள் என்ன செய்கிறார்கள்? பசி வயிற்றில் இருந்தால்தானே அவர்களுக்கு வேலையில் பக்திவரும்? இலவசங்கள் அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டதாக யாரை கேட்டாலும் சொல்கிறார்கள்.

அர்ப்பணிப்பு இல்லை

எந்த வேலை என்றாலும் நம்மவர்கள் கூடுதல் சம்பளம் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளை குறைந்த நேரம் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அர்ப்பணிப்பு குணம் குறைந்து போய்விட்டது. 'இஷ்டம் இருந்தால் வேலை தா! இல்லை என்றால் போ!' என்ற மனநிலையில் இருக்கிறார்கள். கிராமங்களில்கூட இந்த நிலைதான் இருக்கிறது. அதனால்தான் நம்மவர்கள் இருந்தும் வடமாநில தொழிலாளர்களுக்கு நாமே சிவப்பு கம்பளம் விரிக்க நேருவதாக சொல்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்தனர். பின்னர் கொரோனா பரவலால் சொந்த ஊருக்கு சென்றவர்களில் பலர் திரும்பி வேலைக்கு வரவில்லை. இதனால் தற்போது 6 ஆயிரம் பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இதில் பெண்கள் மட்டும் 1,000 பேர் ஆவர். ஒருசிலர் மனைவியுடன் தங்கியிருந்து வேலை செய்கின்றனர்.

இதில் பெரும்பாலான தொழிலாளர்கள் பஞ்சாலைகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், செங்கல் சூளைகள், டீ கடைகள், துரித உணவகங்கள் ஆகியவற்றில் வேலை செய்கின்றனர். மேலும் பானிபூரி, போர்வை, பிளாஸ்டிக் பொருட்கள், பஞ்சு மிட்டாய் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு வடமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நிலை குறித்து வடமாநில தொழிலாளர்களும், அவர்களுக்கு வேலை கொடுத்தவர்களும் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஆட்கள் பற்றாக்குறை

பழனியில் தச்சுத்தொழில் செய்யும் கணேஷ்:- நீண்ட காலமாக தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு உணவு, தங்குமிடம் ஆகியவற்றை இலவசமாக வழங்கினேன். 6 மாதத்துக்கு ஒருமுறை அவருக்கு விடுமுறை கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்புவேன். மாதம் தவறாமல் சம்பளமும் வழங்கி வந்தேன்.

இதனால் அவரும் உற்சாகமுடன் வேலை பார்த்தார். தற்போது அவருடைய உறவினர்கள் 2 பேரை வேலைக்கு சேர்த்துள்ளார். அதேநேரம் உள்ளூர் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குகிறேன். ஆனால் வடமாநிலத்தவர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்காமல் வேலை பார்ப்பதால் உதவியாக இருக்கிறது.

கூடுதல் வேலை வாய்ப்பு

வடமதுரை தனியார் பால் நிறுவன மேலாளர் தர்மராஜ்:- இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் இன்றி வட மாநில தொழிலாளர்களும் வேலை பார்க்கின்றனர். இருதரப்பினருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் தான் வழங்குகிறோம். உள்ளூர் தொழிலாளர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பதால், குறிப்பிட்ட நேரத்தில் பால் பொருட்களை வெளியூர்களுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் வடமாநிலத்தவர்கள் நிறுவனத்தின் விடுதியிலேயே தங்கி வேலை செய்வதால் சரியான நேரத்தில் பொருட்கள் வினியோகம் செய்ய முடிகிறது. இதனால் தான் வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பணத்தை சேமிக்கலாம்

பீகாரை சேர்ந்த தொழிலாளி லட்டுகுமார்:- எங்கள் மாநிலத்தில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை. அதேபோல் சம்பளமும் குறைவு. ஆனால் தமிழகத்தில் தங்குமிடம், உணவு என அனைத்து வசதிகளுடன் வேலை கிடைக்கிறது. நான் தற்போது நெய்க்காரப்பட்டி பகுதியில் காகிதம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு தினமும் ரூ.450 வரை சம்பளம் கொடுக்கின்றனர். அந்த பணத்தை சேமித்து வைத்து குடும்ப கடன் சுமையை குறைக்கிறோம்.

நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் காகித நிறுவன மேலாளர் நாகராஜ்:- உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலேயே வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை பணிக்கு சேர்க்கிறோம். இவர்கள் ஆலைகளிலேயே தங்கி வேலை செய்வதால் பெரும்பாலும் விடுமுறை எடுப்பதில்லை. வாரவிடுமுறை மட்டுமே எடுக்கின்றனர். ஒப்பந்ததாரர்கள் மூலம் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கிறோம். எனினும் அவர்களிடம் ஆதார் அட்டை, முகவரி சான்றிதழ் என அனைத்து தகவல்களையும் வாங்கி வைத்துக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்பார்கள்

வி.புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் குப்புசாமி:- தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயர் படிப்பை முடித்ததும் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். கடுமையாக உழைக்க அவர்கள் தயாராக இல்லை. இதனால் உள்ளூரில் செயல்படும் நூற்பாலைகளுக்கு போதிய அளவில் ஆட்கள் வேலைக்கு கிடைப்பதில்லை. திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்களின் வீடுகளுக்கே வாகனங்களுடன் சென்று வேலைக்கு அழைத்துவரும் நிலையே தற்போது உள்ளது. ஆனாலும் அவர்கள் வேலைக்கு வர மறுக்கின்றனர். இதன் காரணமாகவே வட மாநில தொழிலாளர்களை தேடிச்செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதே நிலை நீடித்தால் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் வேடசந்தூர் பகுதியில் உள்ள 46 நூற்பாலைகளையும் வடமாநில தொழிலாளர்களே ஆக்கிரமிப்பார்கள்.

நூற்பாலை தொழிலாளி கஜந்த் சபர்:- நான் ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தில் இருந்து வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்கு வந்து வேலை பார்க்கிறேன். எங்களது மாநிலத்தில் வேலைக்கு சென்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.200 தான் சம்பளமாக கிடைக்கும். ஆனால் இங்கு 8 மணி நேரம் வேலை செய்தாலே ரூ.400 கிடைக்கிறது. இதுமட்டுமின்றி நூற்பாலை நிர்வாகத்தினர் தங்குவதற்கு இட வசதியும் ஏற்படுத்தி தருவதால் எங்கள் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் இங்கு வேலைக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story